அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5313.
அத்தியாயம் : 49. பாவமீட்சி
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)
அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5315.
அத்தியாயம் : 49. பாவமீட்சி
No comments:
Post a Comment