Wednesday, July 1, 2020

ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை.....



 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.'
ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 1411. 
அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்.'
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1412. 
அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்


அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) 'நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?' எனக் கேட்க அவன் 'ஆம்' என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்ப வில்லையா? எனக் கேட்டதும் அவன் 'ஆம்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 1413. 
அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:. நிச்சயமாக மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணிடம் அபயம் தேடியவர்களாக, நாற்பது பெண்கள் அவனை பின்தொடர்வார்கள்.
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 1414. 
அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்


No comments:

Post a Comment