“எதை,(யாருக்குச்)செலவு செய்யவேண்டும்”
அல்லாஹ்வே தனது திருமுறையில் யாருக்கு முன்னுரிமையாக தர்மம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறான்.
يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று;
நீர் கூறும்:
“(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை
தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்);
மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
(அல்குர்ஆன் : 2:215)
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ
رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே,
நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்;
(அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 63:10)
பணம் இல்லாதவர்கள் எப்படி தர்மத்தின் நன்மைகளை அடைய முடியும்?
சில வழிமுறைகளை பார்ப்போம்.
01. அல்லாஹ்வை புகழ்வது மூலம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்;இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1302.
அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்
02. வெள்ளியன்று பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1540.
ஸஹாபிப் பெண்களின் தர்மம் எப்படி இருந்தது?
பெருநாள் அன்று
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உறுதி கூறுகிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள். அப்போது பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாகப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்தினார்கள். (அவற்றைப் பெறுவதற்காக)
பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1605.
அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள்.
மேலும்,
பெண்களை நோக்கி,
"தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்"
என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து "அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1607.
அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை
மிக சிறப்பு வாய்ந்த தர்மம் எது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1818.
அத்தியாயம் : 12. ஜகாத்
No comments:
Post a Comment